சமாஜ்வாடியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு : ராகுல்

வெள்ளி, 19 டிசம்பர் 2008 (16:19 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், சமாஜ்வாடிக் கட்சிக்கும் இடையே மக்களவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுகள் நடைபெற்று வருவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், அமேதி தொகுதி எம்.பி-யுமான ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

அமேதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதிப் பங்கீடு குறித்து முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடிக் கட்சியுடன் பேச்சுகள் நடைபெறுகின்றன. அடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

அண்மையில் முடிவடைந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு முன்னேற்றமான நிலை ஏற்பட்டிருப்பதையடுத்து, தொகுதி உடன்பாட்டில் பேரம் இருக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு ராகுல் காந்தி பதிலளிக்க மறுத்து விட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை குறித்து கருத்து கூறிய முதல்வர் மாயாவதி காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியிருந்தது குறித்து, அவரிடம் தான் அதுபற்றிக் கேட்க வேண்டும் என்று பதிலளித்தார்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அதிக இளைஞர்கள் போட்டியிடுவார்களா? என்று கேட்டதற்கு, காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய மாணவர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் ஜனநாயக அடிப்படையில் காங்கிரஸ் கட்சி செயல்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று ராகுல் பதிலளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்