கார்கரே விவகாரம்: பதவி விலகல் கடிதம் அனுப்பினார் அந்துலே
வெள்ளி, 19 டிசம்பர் 2008 (13:42 IST)
புதுடெல்லி: மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலின் போது உயிரிழந்த மராட்டிய பயங்கரவாத தடுப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கார்கரே சாவில் மர்மம் இருப்பதாக கூறிய கருத்துக்கு எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அந்துலே, பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சரான ஏ.ஆர்.அந்துலே கடந்த 17ஆம் தேதி மக்களவையில் நடந்த பயங்கரவாத தடுப்பு சட்டவரைவு மசோதா மீதான விவாதத்தின் போது பேசினார்.
அப்போது, கார்கரே பயங்கரவாதத்திற்குப் பலியானாரா? அல்லது வேறு காரணத்திற்காக பலியானாரா என்று எனக்குத் தெரியவில்லை. எனவே அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கார்கரே ஒரு துணிச்சலான அதிகாரி. நாட்டிற்காகத் தனது உயிரைத் தியாகம் செய்ய அவர் தயாராக இருந்தார். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இஸ்லாமியர்கள் அல்லாத சிலருக்கும் தொடர்பு உள்ளது என்ற உண்மையை அவர் வெளிக்கொண்டு வந்தார் என்றார்.
அவரது இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தின. மேலும், அந்துலேவின் கருத்துக்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமளிக்க வேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தியது.
இந்நிலையில், தாம் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கு தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அந்துலே கடிதம் அனுப்பியுள்ளார். இவ்விவகாரத்தில் விரைவில் முடிவெடுக்கப்படும் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பதவியில் இருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாவது குறித்து அமைச்சர் அந்துலேவிடம் நேற்று செய்தியாளர்கள் கேட்ட போது, அதனை மறுக்கவும் இல்லை ஒப்புக்கொள்ளவும் இல்லை என சூசகமாக பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.