மாதம் ரூ.2,000 கல்வி உதவித்தொகை : மத்திய அரசின் புதிய திட்டம்
வியாழன், 18 டிசம்பர் 2008 (19:08 IST)
கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தை அமல்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
"கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் திட்டம்" என்ற இந்த புதிய திட்டம் 2008-09 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
இத்திட்டத்தின் மூலம், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பயிலும் வேறு கல்வி உதவித்தொகை எதையும் பெறாத, கிரீமி லேயர் அல்லாத படிப்பில் சிறந்த ஆண்டுக்கு 82,000 மாணவர்கள் வரை பயன்பெறுவர்.
மொத்த உதவித்தொகையில் 50 விழுக்காடு மாணவிகளுக்கு வழங்கப்படும். கல்லூரி, பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு பயிலும் முதல் 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000மும், 4-வது மற்றும் 5-வது ஆண்டுக்கு மாதம் ரூ.2,000மும் உதவித்தொகையாக வழங்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் பயிலும் தொழிற்கல்வி மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
இருப்பினும் ஆண்டுதோறும் மாணவர்களின் நன்னடத்தை, தேர்ச்சியைப் பொறுத்து ஸ்காலர்ஷிப் புதுப்பிக்கப்படும்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை அவர்களின் குறிப்பிட்ட வங்கி கணக்கில் நேரடியாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் டெபாசிட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.