உச்ச நீதிமன்றத்தில் 3 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர்
புதன், 17 டிசம்பர் 2008 (15:46 IST)
உச்ச நீதிமன்றத்தில் இன்று 3 புதிய நீதிபதிகளுக்குத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கேரள உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹெச்.எல். டட்டு, பாட்னா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அசோக் குமார் கங்கூலி ஆகியோர்தான் புதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆவர்.
இன்று பதவியேற்றுள்ள இவர்களுடன் சேர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், வி.கே. குப்தா ஆகிய மூன்று மூத்த நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அனுப்பிய பரிந்துரைகளை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது.
இருந்தாலும், தனது பரிந்துரைகளை உரிய நடவடிக்கைக்காக மத்திய அரசிற்கு மீண்டும் அனுப்பியுள்ளார் தலைமை நீதிபதி.
மேற்கண்ட மூன்று நீதிபதிகளும் மிக மூத்தவர்கள் என்றாலும் கூட அவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படாததற்கு காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.