ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான 6ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் அமைதியான முறையில் துவங்கியது.
வாக்குப்பதிவை புறக்கணிக்க வேண்டும் என பிரிவினைவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளதால் இன்று தேர்தல் நடக்கும் 16 தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இன்று தேர்தல் நடக்கும் 4 மாவட்டங்களிலும் குளிரை பொருட்படுத்தாமல் வழக்கம் போல் 8 மணிக்கே வாக்குப்பதிவு துவங்கியதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். துவக்கத்தில் மந்தமாகக் காணப்பட்டாலும் நேரம் செல்லச் செல்ல வாக்குப்பதிவு சூடுபிடித்து வருகிறது.
குல்காம் தொகுதியில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு காலதாமதமாக துவங்கியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படாத காரணத்தால் வாக்குப்பதிவு தாமதமானது. மாவட்ட தேர்தல் அதிகாரி அப்துல் ஜமானும் இதனை உறுதி செய்துள்ளார்.
இன்றைய தேர்தலில் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான முஃப்தி முகமது சயீத், குலாம் நபி ஆசாத் ஆகியோர் உட்பட 271 வேட்பாளர்களின் தேர்தல் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்பட உள்ளது.