மக்களைவத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது. இதற்கான கூட்டம் வருகிற 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை டெல்லியில் நடக்கிறது.
மக்களவை பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் மத்தியில் முடிகிறது. எனவே அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். ஒரு வேளை மத்திய அரசு முன் கூட்டியே தேர்தலை நடத்த பரிந்துரை செய்யவும் வாய்ப்பு உள்ளதால் பிப்ரவரி மாதமே கூட தேர்தல் வந்து விடும்.
எனவே மத்திய தேர்தல் ஆணையம், மக்களவை தேர்தலை நடத்துவதற்கு இப்போதே தயாராகி வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்து கிறது. இதற்கான கூட்டம் வருகிற 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடக்கிறது.
தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி மற்றும் ஆணையர்கள் நவீன் சாவ்லா, குரோஷி ஆகியோர் மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.
மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள், வாக்களர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டை, பாதுகாப்புக்கு தேவையான படைகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அப்போது ஆலோசிக்கப்படுகிறது.
16ஆம் தேதி தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் பெருநகர ஆணையர்களுடன் ஆலோசனை நடக்கிறது. அதற்கு அடுத்த 2 நாட்களும் வடகிழக்கு உள்ளிட்ட அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடக்கிறது.
மக்களவைத் தேர்தலையொட்டி அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில் ஆள்சேர்ப்பு மற்றும் திருத்தம் ஆகிய பணிகளை ஜனவரி 1ஆம் தேதி வரை செய்யும் படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.