திட்டமிட்டபடி டிச.20 முதல் லாரிகள் வேலை நிறுத்தம்!
வெள்ளி, 12 டிசம்பர் 2008 (21:46 IST)
திட்டமிட்டபடி நாடு தழுவிய அளவில் வரும் 20ஆம் தேதி முதல் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளதையடுத்து, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்கக் கோரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
டீசல் விலையை குறைக்காவிட்டால் அகில இந்திய அளவில் வருகிற 20ஆம் தேதி முதல் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.
இது குறித்து மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சக செயலருடன், லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது டீசல் விலையை லிட்டருக்கு மேலும் 2 ரூபாய் குறைப்பது பற்றி அரசு பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இதை லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் ஏற்காததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்தை தோல்வி அடைந்ததால், திட்டமிட்டபடி வருகிற 20ஆம் தேதி முதல் நாடு தழுவிய லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.