ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வைத் தோற்கடித்து, காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. எனினும் புதிய முதல்வராக யாரை தேர்ந்து எடுப்பது என்பதில் அம்மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவியது.
இந்த நிலையில், சட்டமன்ற காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் உள்ளிட்ட மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் புதிய முதல்வரை நியமிக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு வழங்குவது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் அசோக் கெலாட் ஆதரவாளர்களுக்கும், மத்திய அமைச்சர் சிஸ்ராம் ஓலா ஆதரவாளர்களுக்கும் இடையே யாரை முதல்வராக தேர்ந்து எடுப்பது என்பதில் கைகலப்பும், மோதலும் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் தலையிட்டு இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.