மும்பை தாக்குதலுக்கு நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கோரினார் பிரதமர்
வியாழன், 11 டிசம்பர் 2008 (22:59 IST)
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தடுத்த நிறுத்த தவறியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இது போன்ற சவால்களை சந்திக்க, நவீன மற்றும் செயற்திறனுள்ள காவல் படைகள் நமது நாட்டிற்கு தேவை என்றும் அவர் கூறினார்.
பயங்கரவாதத்தை தோற்கடிக்க, "காவல் படைகளை அடிமட்டத்தில் இருந்தே வலுப்படுத்த வேண்டும்" என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
"நாம் பயங்கரவாதத்தை தோற்கடிப்போம். பயங்கரவாதம் போன்ற குற்றச்செயல்களைப் புரிபவர்கள் அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும்" என்றும் கூறினார்.
பயங்கரவாதத்தை அடக்க பாகிஸ்தான் மேலும் அதிகஅளவில் செயல்பட வேண்டும் என்றும் "நமது வான் எல்லைக்குள் வரும் அனைத்து விமானங்களும் கண்காணிக்கப்படும்" என்றும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் 'இரண்டு நிலைகள் இருக்கமுடியாது' என்று கூறிய அவர், பயங்கரவாதிகளில் "நல்ல பயங்கரவாதிகள், அல்லது கெட்ட பயங்கரவாதிகள்" என இருக்க முடியாது என்றார்.
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒழிப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கு அடைக்கலம் தரும் போக்கையும் நிறுத்த வேண்டும். இல்லை என்றால் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இந்தியா தயங்காது என்றும் மன்மோகன் சிங் கூறினார்.