பயங்கரவாத பிரச்சனைக்குத் தீர்வுகாண அமெரிக்காவிற்கு ஓடுவதை நிறுத்த வேண்டும் என்று பா.ஜ.க. கூறியுள்ளது.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் பேசிய பா.ஜ.க.வின் மூத்த தலைவர் அருண் ஷோரி, 'பாகிஸ்தான் ஆதரவுடன் நடக்கும் பயங்கரவாதச் செயல்களை அமெரிக்காதான் தீர்க்க முடியும் என நம்புவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்' என்றார்.
பாகிஸ்தானுக்கு சீனா உதவுகிறது. அதைப் பயன்படுத்தி பயங்கரவாதச் செயல்களை ஊக்குவிக்கும் பாகிஸ்தான், அதேநேரத்தில் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுக்களிலும் ஈடுபட்டு வருகிறது என்றர் ஷோரி, அமைதிப் பேச்சுக்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
காங்கிரஸ் ஆட்சியில் பயங்கவாதத் தாக்குதல்கள் குறைந்துள்ளன என திரும்பத் திரும்பக் கூறுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், மும்பை தாக்குதலுக்கு சில நாள்களுக்கு முன்பு பா.ஜ.க. ஆட்சியில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களையும் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களையும் அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஒப்பிட்டுப் பேசியதை சுட்டிக் காட்டினார்.