பன்முக ஆளுமைத் தன்மை கொண்ட பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி தனது இனிய இசையால் கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளை கொண்டார் என்று பிரதமர் மன்மோகன் சிங், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
webdunia photo
FILE
புதுடெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில், கௌரி ராம நாராயண் எழுதிய எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றிய நூலை பிதரமர் மன்மோகன் சிங் வெளியிட்டார். பின்னர் அவர் பேசுகையில், சுப்புலட்சுமியின் இசைக்கு இந்தியாவை ஒன்றிணைக்கும் சக்தி இருந்தது. அவரின் மதிப்பீடுகளுக்கும், வாழ்க்கை நெறிகளுக்கும் உண்மையாக இருப்பதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும். அவரின் இசை மொழிகளுக்கு அப்பாற்பட்டு இந்திய இதயங்களை இணைத்தது என்றார்.
ஐக்கிய நாடுகள் சபையில் 1966 ஆம் ஆண்டு எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசையை தாம் கேட்ட இனிய தருணத்தை நினைவுகூர்ந்த பிரதமர், அவர் பாடிய மொழியை புரிந்து கொள்ளாதவர்கள்கூட அவரின் இசையால் கட்டுண்டு இருந்ததாகத் தெரிவித்தார்.
எம். எஸ். சுப்புலட்சுமி, மகாத்மா காந்தியின் ஆசிகளைப் பெற்றவர். அவரின் இசைக் கச்சேரியை கேட்ட ஜவஹர்லால் நேரு, இசையின் அரசிக்கு முன்னால் நான் யார்? வெறும் பிரதமர்தானே என கூறியதையும் பிரதமர் மன்மோகன் சிங் நினைவுகூர்ந்தார்.