தோரியத்தை மையமாகக் கொண்டதே நமது அணுத் திட்டம்: அரசு
வியாழன், 11 டிசம்பர் 2008 (17:38 IST)
இந்தியா மேற்கொண்டுவரும் மூன்று கட்ட அணுத்திட்டம், நமது நாட்டில் மிக அதிக அளவிற்கு கிடைக்கும் தோரியத்தைக் கொண்டு அணு மின் சக்தி உருவாக்குவதை மையமாகக் கொண்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
webdunia photo
FILE
நமது நாட்டில் மிகக் குறைவாக கிடைக்கும் யுரேனியத்தையும், மிக அதிக அளவிற்கு கிடைக்கும் தோரியத்தையும் கலந்து மின் சக்தி உற்பத்தி செய்யும் தோரிய உலையை வெற்றிகரமாக உருவாக்கி சோதித்து வருவதாக பிரதமர் அலுவலக அமைச்சர் பிரிதிவிராஜ் சவான் கூறினார்.
மாநிலங்களவையில் இன்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய உறுப்பினர்கள் ராம் ஜேத்மலானி, ராஜ் மொஹிந்தர் சிங் மஜிதா ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் பிரிதிவிராஜ் சவான், நமது அணுத் திட்டத்தின் இரண்டாவது கட்டமான வேக ஈனுலையில் இருந்து பெறப்படும் யுரேனியம் 233ஐ தோரியத்துடன் கலந்து அதன் மூலம் அணு மின் சக்தி உற்பத்தி செய்யும் சோதனையை நாம் வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
சென்னையை அடுத்த கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு சக்தி மையத்தில், காமினி என்ற ஆய்வு உலையில் தோரியத்தையும், யுரேனியத்தையும் பயன்படுத்தி 1997ஆம் ஆண்டு முதல் மின்சாரம் தயாரிக்கும் சோதனை முயற்சி வெற்றிகரமாக நடந்து வருவதாகத் தெரிவித்த பிரிதிவிராஜ் சவான், இதில் பயன்படுத்தப்பட்ட தோரியம் எரிபொருள் கற்றைகளில் இருந்து யுரேனியத்தையும், புளூடோனியத்தையும் பிரித்தெடுக்கும் பணி டிராம்பேயிலுள்ள ஆய்வு உலையிலும், மற்ற கடின நீர் உலைகளிலும் செய்யப்பட்டு வருவதாகக் கூறினார்.
நமது நாட்டில் மோனசைட் என்ற கனிமத்தில் கிடைக்கும் தோரியம் அணுப்பொருள் 8,07,713 டன்கள் அளவிற்கு உள்ளது என்றும், இதைக் கொண்டு ஆண்டொன்றுக்கு 2 இலட்சம் கிகா வாட் மின் சக்தி கிட்டும் என்றும் அமைச்சர் பிரிதிவிராஜ் சவான் கூறினார்.