பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு ஆதரவு: அத்வானி!
வியாழன், 11 டிசம்பர் 2008 (16:24 IST)
நமது ஒற்றுமையின் வலிமையை பாகிஸ்தானிற்கும் சர்வதேச நாடுகளுக்கும் அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் வெற்றியடைய மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பா.ஜ.க.வும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் முழுமையாக ஆதரவளிக்கும் என்றார்.
மக்களவையில் இன்று மும்பை தாக்குதல்கள் குறித்து உள்துறை அமைச்சர் வைத்த அறிக்கையின் மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய எல்.கே.அத்வானி, "ஆளும் கூட்டணியும் எதிர்க்கட்சிகளும் மதம், மாநிலம், நாடு ஆகிய எல்லைகளைக் கடந்து ஒன்றுபட்டு நிற்கின்றன என்பதை சர்வதேச நாடுகளுக்கு அறிவிக்க வேண்டிய சந்தர்ப்பம் இது" என்றார்.
மேலும், "ஒரு தேசியக் கட்சி என்ற முறையில், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் வெற்றியடைய மேற்கொள்ளப்படும் எல்லா முயற்சிகளிலும், தனது அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பா.ஜ.க. அரசுடன் இணைந்து நிற்கும்" என்று அத்வானி தனது 40 நிமிட உரையில் தெரிவித்தார்.
மும்பை மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் இந்தியாவின் வளர்ச்சி, அதன் பாரம்பரியம் ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஆகும் என்று குறிப்பிட்ட அத்வானி, பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்தான் இங்கு நடந்துள்ள தாக்குதல்களுக்குப் பொறுப்பு என்றார். மேலும், தெற்கு ஆசிய பயங்கரவாதத்தின் மையம் பாகிஸ்தான்தான் என்று குற்றம்சாற்றிய அவர், இதைக்கூற எந்த தயக்கமும் வேண்டியதில்லை என்றார்.
மும்பை மீதான தாக்குதல்கள் 'நாடு சாரா சக்திகளின்' கைவரிசை என்ற பாகிஸ்தான் அதிபர் ஆஷிப் அலி சர்தாரியின் கருத்தை நிராகரித்த அவர், மும்பையை நிலைகுலையச் செய்யும் அளவிற்கு சாதாரண மக்களிடம் எப்படித் திறன் இருக்க முடியும் என்று ஆச்சர்யம் தெரிவித்ததுடன், "அவர்களைப் (பயங்கரவாதிகளை) பார்த்தால் இராணுவக் கமாண்டோக்கள் போல இருந்தது" என்றார்.
பாகிஸ்தானில் ஜெய்ஸ் ஈ மொஹம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசார் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள நடவடிக்கை வெறும் கண் துடைப்பு என்று குறிப்பிட்ட அத்வானி, "இந்த நடவடிக்கையால் நாம் முட்டாள்கள் ஆக்கப்பட்டுள்ளோம்" என்றதுடன், பாகிஸ்தானில் யார் கையில் இறுதி முடிவு இருக்கிறது என்றே தெரியவில்லை என்றார்.