மத்திய அரசின் நடவடிக்கைகள் வேடிக்கையாக உள்ளது: பா.ஜ.க.!
வியாழன், 11 டிசம்பர் 2008 (17:53 IST)
பாகிஸ்தான் அரசின் ஒத்துழைப்பும், உள்ளூர் சக்திகளின் உதவியும் இல்லாமல் தாக்குதலை நடத்தியிருக்க முடியாது என்ற உண்மையை மறைத்து, மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களை அணுகும் மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நடவடிக்கைகள் வேடிக்கையாக உள்ளதென பா.ஜ.க. கூறியுள்ளது.
மும்பை தாக்குதல்கள் குறித்து மாநிலங்களவையில் இன்று உள்துறை அமைச்சர் வைத்த அறிக்கையின் மீதான விவாதத்தைத் துவங்கி வைத்துப் பேசிய பா.ஜ.க. வின் மூத்த உறுப்பினர் அருண் ஷோரி, "தற்போதைய பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டில் அந்நாட்டு உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யும், இராணுவமும் இல்லை என்று அனைவரும் அறிந்துள்ள நிலையில், முட்டாள்களின் கூடாரமான மத்திய அரசு, பயங்கரவாதத்தை முறியடிக்கப் பாகிஸ்தானின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளது" என்றார்.
பாகிஸ்தானின் 60 ஆண்டு ஆயுட்காலத்தில் 50 ஆண்டுகள், ஐ.எஸ்.ஐ.யின் ஆதிக்கம் மற்றும் இராணுவ ஆட்சி ஆகியவற்றின் கீழ்தான் பாகிஸ்தான் அரசு இருந்துள்ளது. இந்நிலையில், மும்பை பயங்கரவாதத் தாக்குதலிற்குக் காரணமாக குற்றவாளிகளைக் கைது செய்து ஒப்படைக்க வேண்டும் என்று அந்நாட்டின் தற்போதைய அரசிடம் கோருவது வேடிக்கையாக உள்ளது என்றார் அவர்.
தனது சொந்த நாட்டுப் புலனாய்வு அமைப்புக்களின் மீது நம்பிக்கை இல்லாததால்தானே, தனது மனைவி பெனாசிர் புட்டோ படுகொலை குறித்து விசாரிக்க ஸ்காட்லாந்து யார்ட் உதவியைப் பாகிஸ்தான் அதிபர் ஆஷிப் அலி சர்தாரி கோரினார் என்றும் அருண் ஷோரி குறிப்பிட்டார்.
இதற்கு மேலும் துன்பப்பட பாகிஸ்தான் விரும்பாது என்று குறிப்பிட்ட அவர், பயங்கரவாத இயக்கங்களுக்கு ஊட்டச்சத்து கொடுத்து வளர்ப்பதை பாகிஸ்தான் அரசு தொடரத்தான் போகிறது என்று குற்றம்சாற்றினார்.
மேலும், கடத்தல், ஹவாலா உள்ளிட்ட தற்போது நடைமுறையில் உள்ள வழிமுறைகளைத்தான் பயங்கரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர். மும்பைக்கு வந்த அவர்களுக்கு எங்கு, எப்படிப் போக வேண்டும் என்பதற்குத் தெரிந்திருக்கிறது. இதை உள்ளூர் உதவியில்லாமல் செய்திருக்க முடியாது. ஆனால், அதைக் கண்டுபிடிக்கக் கூட அரசு திராணியற்று உள்ளது என்று குறிப்பிட்ட அருண் ஷோரி, கடல் வழியாக அச்சுறுத்தல் உள்ளது என்பதைக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துள்ள மத்திய அரசு, அதை முறியடிப்பதில் தோல்வியடைந்து விட்டது என்றார்.