மும்பை தாக்குதலில் ஈடுபட்டது பாக். பயங்கரவாதிகளே: ப.சிதம்பரம்

வியாழன், 11 டிசம்பர் 2008 (11:55 IST)
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்பட்டுவரும் பயங்கரவாதிகளே ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு நம்மிடம் முழுமையான ஆதாரம் உள்ளது என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மக்களவையில் தெரிவித்தார்.

நாடாளும‌ன்ற மழை‌க்கால‌க் கூ‌ட்ட‌த் தொட‌‌ரி‌ன் மூ‌ன்றா‌ம் பகு‌தி நேற்று துவங்கியது. அதில் மு‌ம்பை ‌மீதான பய‌ங்கரவாத‌த் தா‌க்குத‌ல்க‌ள் ‌மிகவு‌ம் கொடூரமானவை எ‌ன்று கூ‌றியு‌ள்ள நாடாளும‌ன்ற‌ம், பய‌ங்கரவாத‌த்தை மு‌றியடி‌க்க‌க் கடு‌ம் நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியது.

இந்நிலையில், இன்று மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பயங்கரவாதத்தை முறியடிக்க மத்திய அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்தும், மும்பை பயங்கரவாத விசாரணைகள் குறித்தும் விளக்கினார்.

அதன்படி, தேசிய பாதுகாப்பு படையினருக்கு மண்டல அளவிலான மையங்களை வளர்ந்த நகரங்களுக்கு அருகே அமைப்பது, தேசிய அளவிலானதொரு புலனாய்வு அமைப்பை கூடிய விரைவில் அமைப்பது முக்கியம் என்றார்.

மும்பை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்திய புலனாய்வு அமைப்பு சேகரித்துள்ள ஆதாரங்கள் மூலம் பாகிஸ்தான் மண்ணில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்புள்ளது தெளிவாகியுள்ளது. இந்தியாவிடம் உள்ள ஆதாரங்களை யாரும் மறுக்க முடியாது என ப.சிதம்பரம் பேசினார்.

நாட்டின் கடலோரப் பாதுகாப்பை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் ப.சிதம்பரம், நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் அனைத்து மசோதாக்களை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.