3வது முறையாக டெல்லி முதல்வராகிறார் ஷீலா தீக்ஷித்!
புதன், 10 டிசம்பர் 2008 (15:25 IST)
டெல்லி மாநிலக் காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவராக ஷீலா தீக்ஷித் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் அவர் தொடர்ந்து மூன்றாம் முறையாக முதல்வர் பதவியை ஏற்கவுள்ளார்.
தலைநகர் புது டெல்லியில் இன்று மதியம், காங்கிரஸ் கட்சியின் 42 சட்டப்பேரவை உறுப்பினர்களும் கலந்துகொண்ட கூட்டத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவராக ஷீலா தீக்ஷித் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தக் கூட்டத்தில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் மொஹ்சினா கிட்வாய், மத்தியத் துணை நிதியமைச்சர் பி.கே.பன்சால், டெல்லி மாநிலக் காங்கிரஸ் தலைவர் ஜெய் பிரகாஷ் அகர்வால் ஆகியோரும் பங்கேற்றனர்.
கூட்டத்தின் இடையில், டெல்லி மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றிபெற உழைத்தவர்களுக்குக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக மொஹ்சீனா கிட்வாய் கூறியதாகவும், இதையடுத்து, ஷீலா தீக்ஷித்தை சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்வு செய்யும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்துப் பி.டி.ஐ. நிறுவனத்திடம் பேசிய ஷீலா தீக்ஷித், "இன்று நான் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன்" என்று கூறினார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு ஒருவார காலப் போராட்டத்திற்குப் பிறகு முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட ஷீலா தீக்ஷித், இந்த முறை வெறும் 90 நிமிடங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.