மும்பைத் தாக்குதலில் இணையவழித் தொலைபேசி உபயோகம்!
புதன், 10 டிசம்பர் 2008 (13:28 IST)
மும்பை மீது தாக்குதல் நடத்தியுள்ள பயங்கரவாதிகள், தாங்கள் பயன்படுத்தியுள்ள செயற்கைக்கோள் இணையவழித் தொலைபேசிச் சேவைக்கான கட்டணத்தை போலி அடையாள அட்டை மூலம் பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் செலுத்தியுள்ளனர்.
மும்பைத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஸ்காட்லாந்து யார்ட், அமெரிக்க உள் புலனாய்வுத் துறை (எஃப்.பி.ஐ.) உள்ளிட்ட மேற்கத்திய அமைப்புகளும், இந்தியப் புலனாய்வு அமைப்பினரும் இணைந்து இதைக் கண்டுபிடித்து உள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இணையவழித் தொலைபேசித் தொழில்நுட்பத்தின் (Voice over Internet Protocol (VoIP)) மூலம், ஒருவர் தனது தொலைபேசி அழைப்புக்களை இணையத்தின் மூலம் மேற்கொள்ள முடியும். இதில் ஒருமுனையில் குரல் ஒலி டேட்டா பாக்கெட்டுகளாக (packets of data) மாற்றப்பட்டு அகலக்கற்றை இணைப்பு மூலம் மறுமுனைக்கு அனுப்பப்பட்டு, அங்கு மீண்டும் ஒலியாக மாற்றப்படும்.
இதில் ஒட்டுக்கேட்பது இயலாத காரியம். வேண்டுமெனில் தகவல்களை வழிமறித்துப் பதிவு செய்து, பின்னர் அதனை ஒலியாக மாற்றிக் கேட்கலாம். இந்தச் சேவையைப் பயன்படுத்த வேண்டுமெனில் இணையச் சேவை வழங்கும் நிறுவனத்தில் கட்டணம் செலுத்திக் கணக்குத் துவங்க வேண்டும்.
மும்பையில் தாக்குதல்களை நடத்தியுள்ள பயங்கரவாதிகள் இந்த நவீனச் சேவையைத்தான் பயன்படுத்தியுள்ளனர். இதன் கணக்கு எண் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லண்டோ பகுதியில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்கிற்கான கட்டணம் பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் போலி அடையாள அட்டை மூலம் செலுத்தப்பட்டுள்ளது.
போலி அடையாள அட்டையைப் பயன்படுத்திப் பிரபலமான பணப்பறிமாற்ற நிறுவனம் மூலம் 300 அமெரிக்க டாலர் தொகையைச் செலுத்தி கணக்கு அட்டையைப் பெற்றுள்ளனர்.
இந்தச் சேவையின் மூலம் செயற்கைக்கோள் தொலைபேசியைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் உள்ள லஸ்கர் ஈ தயீபா இயக்கத்தைச் சேர்ந்த ஜாகீர்-உர் ரஹ்மான் லாக்வி உள்ளிட்ட பல பயங்கரவாதிகளிடம் மும்பையில் தாக்குதல் நடத்தியுள்ள பயங்கரவாதிகள் பேசியுள்ளனர்.