டெல்லி உள்பட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்த நிலையில், நாடாளுமன்றம் மீண்டும் இன்று கூடுகிறது. அண்மையில் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் இக் கூட்டத் தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
நாடாளுமன்றத்தின் மழை காலக் கூட்டத் தொடர் கடந்த மாதம் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கியது. ஒரு வாரம் மட்டும் நடந்த இந்த கூட்டத் தொடர், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக 24ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
சுமார் 45 நாட்கள் இடைவெளிக்கு பிறகு நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது. இந்த கூட்டத் தொடரில் பல முக்கிய சட்ட வரைவுகள் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்கள், சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து எப்ஐஏ எனப்படும் கூட்டுப் புலனாய்வு அமைப்பை உருவாக்க இந்த கூட்டத் தொடரில் சட்ட வரைவு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று கூடும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளில், அண்மையில் மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங், மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் இறந்தவர்கள் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்படலாம் என தெரிகிறது.