தமிழக வெள்ள நிவாரணத்துக்கு ரூ.200 கோடி: மத்திய அரசு ஒதுக்கீடு
செவ்வாய், 9 டிசம்பர் 2008 (11:31 IST)
தமிழகத்தில் அண்மையில் புயல், கனமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை முன்னிட்டு உடனடியாக நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுள்ள மத்திய அரசு உடனடியாக ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாத இறுதியில் பெய்த கனமழையில் 177 பேர் பலியாயினர். ஆயிரக்கணக்கான வீடுகளிலும், குடிசைகளிலும் வெள்ளம் புகுந்தது. நூற்றுக்கணக்கான கால்நடைகளும் உயிரிழந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாயின. இதைத் தொடர்ந்து, மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதியது.
இந்த நிலையில், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்துவதற்காக அனைத்து கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்ற முதலமைச்சர் கருணாநிதி, பிரதமரை சந்தித்தபோது தமிழகத்துக்கு வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை எடுத்துக் கூறி, வெள்ள நிவாரணத்துக்கு உடனடியாக ரூ.1,000 கோடி நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று உடனடியாக மத்திய அரசு நேற்று, ரூ.200 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
இது தொடர்பாக இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட புயல், கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை கருத்தில் கொண்டும், தமிழக அரசு உடனடியாக நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையின் விளைவாகவும் மத்திய வேளாண்மை, நுகர்வோர் நலன், பொது வினியோகத் துறை அமைச்சர் சரத்பவார், தமிழகத்துக்கு ரூ.200 கோடி நிதி உடனடி நிவாரணமாக அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாக தமிழக அரசுக்கு முன்பணமாக இந்த நிதி அளிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதத்தை மத்திய அரசு குழு தற்போது மதிப்பீடு, செய்து வருகிறது. இக்குழுவின் அறிக்கைக்கு பின்பு தமிழகத்துக்கு அளிக்கப்படவுள்ள நிதி குறித்த இறுதி முடிவு மேற்கொள்ளப்படவிருக்கிறது.