நெருக்கடி நேரங்களில் நேரடி ஒளிபரப்பிற்குக் கட்டுப்பாடு: அரசு ஆலோசனை!
வியாழன், 4 டிசம்பர் 2008 (13:59 IST)
பயங்கரவாதத் தாக்குதல்கள் போன்ற நெருக்கடி நேரங்களில் தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு நடத்தக் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலிபோது தொலைக்காட்சிகள் நடத்திய நேரடி ஒளிபரப்பு, பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளைப் பாதித்தன என்ற குற்றச்சாற்று பரவலாக எழுந்துள்ள நிலையில் அரசு இம்முடிவை மேற்கொண்டுள்ளது.
மும்பையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக இரண்டாவது நாள் நடத்தப்பட்ட தாக்குதல்களின்போது தொலைக்காட்சி ஒளிபரப்பு சிறிது நேரம் தடை செய்யப்பட்டது.
பயங்கரவாதிகள் தொலைக்காட்சி ஒளிபரப்பை பார்த்துத் தங்களின் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் தொலைக்காட்சிகளின் நிர்வாகங்களைத் தொலைபேசியில் அழைத்த அரசு, பாதுகாப்புப் படையினரின் மோதலை மட்டும் காட்டுவதை விடுத்து, அவர்கள் மக்களை மீட்கும் காட்சிகளையும் காட்ட வேண்டும் என்று அறிவுறுத்தியது.
சிறிது நேரத்திற்குப் பிறகு ஒளிபரப்பு சரி செய்யப்பட்டதுடன், தாக்குதல்கள் முடியும் வரை அனுமதிக்கப்பட்டது.
பின்னர், பயங்கரவாதிகளுக்கும் எல்லைக்கு அப்பால் உள்ள அவர்களின் தலைமைக்கும் இடையில் நடந்த உரையாடலை மறித்துக் கேட்டபோது, தொலைக்காட்சி ஒளிபரப்பு அவர்களுக்கு உதவிய தகவல் உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து மராட்டிய மாநில அரசின் உயர் மட்டக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டபோது, தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிபரப்பை நெருக்கடி நேரங்களில் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.