பிரதமருடன் பான்-கி-மூன் தொலைபேசியில் பே‌ச்சு

புதன், 3 டிசம்பர் 2008 (18:03 IST)
பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இன்று தொலைபேசியில் பேசிய ஐ.நா பொதுச் செயலர் பான்-கி-மூன், மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற கருத்தை ஆமோதித்ததுடன், அதற்கான நடவடிக்கைகளுக்கு ஐ.நா. உதவிடும் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஐ.நா தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமரை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட பான்-கி-மூன், மும்பை தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததாக கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இந்த உரையாடலின் போது, மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியவர்களையும், அதற்கு துணை நின்றவர்களையும் சட்டத்தின் முன்பு நிறுத்துவது கடினமான பணி என்றாலும், அதனை நிறைவேற்ற அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மும்பை தாக்குதலின் போது இந்திய மக்களின் தைரியமும், அத்தாக்குதலில் இருந்து மீளும் தன்மையும் பாராட்டக் கூடிய வகையில் இருந்ததாகவும் பான்-கி-மூன் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்