என்ன செய்ய வேண்டுமோ அதனைக் காலம் சொல்லும்: பிரணாப்

புதன், 3 டிசம்பர் 2008 (12:46 IST)
மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை காலம் தீர்மானிக்கும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

மும்பை உள்ளிட்ட இந்தியாவின் மீது நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களின் பின்னனியில் இருந்து செயல்பட்ட மசூத் அசார் (ஜெய்ஸ் ஈ மொஹம்மது இயக்கத் தலைவன்), ஹஃபீஸ் மொஹம்மது சையத் (லஸ்கர் ஈ தயீபா தலைவன்), தாவூத் இப்ராஹீம் (மும்பை நிழல் உலக தாதா) ஆகியோர் உள்ளிட்ட 20 பயங்கரவாதிகளின் பட்டியல் பாகிஸ்தானிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்து ஒப்படைக்குமாறு அந்நாட்டை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

தலைநகர் டெல்லியில் இந்திய- அரபு மன்றம் ஏற்பாடு செய்திருந்த பண்பாட்டிற்கான கூட்டாண்மை எனும் கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற்ற வருகை தந்த பிரணாப் முகர்ஜி, “20 பயங்கரவாதிகளை கைது செய்து ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். அவர்கள் அனைவரும் இந்திய சட்டங்களின் படி பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள குற்றவாளிகள்” என்று தெரிவித்தார்.

மும்பை தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறதே என்று கேட்டதற்குப் பதிலளித்த பிரணாப் முகர்ஜி, “இராணுவ நடவடிக்கைப் பற்றி யாரும் பேசவில்லை” என்று பதிலளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்