புதுடெல்லியில் இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், உள்துறை அமைச்சர் ஷிவ்ராஜ் பாட்டீல் தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்தார்.
மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் என்ற வகையில் தானே பொறுப்பேற்று தனது பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்ததாக புதுடெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இதுபற்றி பிரதமர் அலுவலகத்தில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் இல்லை.
பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள், பயங்கரவாத தாக்குதலுக்குப் பொறுப்பேற்று, உள்துறை அமைச்சர் ஷிவ்ராஜ் பாட்டில் பதவி விலக வேண்டும் என்று கூறி வந்தது.
மேலும், நேற்று இரவு நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நடந்த விவாதத்தின்போது உள்துறை அமைச்சகத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனறு பல உறுப்பினர்கள் கூறியிருந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை 6 மணிக்கு பிரதமரின் இல்லத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.