3 காவல்துறை அதிகாரிகளை கொன்றவன் : பிடிபட்ட தீவரவாதி கசாப் வாக்குமூலம்!
ஞாயிறு, 30 நவம்பர் 2008 (05:46 IST)
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது கொல்லப்பட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலாஸ்கர், காவல்துறை கூடுதல் ஆணையர் அசோக் காம்தே ஆகியோரை சுட்டுக்கொன்றது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முகமது அஜ்மல் முகமது அமின் கசாப் என்ற தீவிரவாதி எனத் தெரியவந்துள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதலின் போது கைது செய்யப்பட்ட ஒரே தீவிரவாதி கசாப் மட்டுமே. இவன் டிசம்பர் 11ஆம் தேதி வரை காவல்துறை கட்டுப்பாட்டில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளான்.
இவனிடம் நடத்திய விசாரணையில், தாக்குதல் நடந்த புதன்கிழமை இரவு 10 தீவிரவாதிகள் கடல் வழியாக நகருக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் இரண்டு, இரண்டு பேராக பிரிந்து தாக்குதல் நடத்த வேண்டிய இடத்துக்கு சென்றுள்ளதாக தெரிகிறது.
தாக்குதல் நடத்த வேண்டிய இடத்துக்கு பயங்கரவாதிகள் டாக்சியில் சென்றுள்ளனர். இதற்காக வாடகையாக இந்திய பணத்தை கொடுத்துள்ளனர். ஒவ்வொரு பயங்கரவாதியும் அவர்களுடன் தலா ரூ.6,200 பணத்தை எடுத்துச் சென்றுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கசாப் மற்றும் அவனுடன் வந்த இஸ்மாயில் கானும் முதலில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்துக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து சென்ற அவர்கள் காமா மருத்துவமனை, ஜி.டி. மருத்துவமனையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாஜ், ஓபராய், நரிமன் ஹவுசில் தங்கியிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து பின்னர் அவர்களை பயன்படுத்தி அங்கிருந்து தப்ப திட்டமிட்டதாக விசாரணையின் போது கசாப் தெரிவித்துள்ளான்.
மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இணைய தளம் மூலமாகவே இங்குள்ள இடங்கள் குறித்து தெரிந்து வைத்திருந்ததாகவும், இதற்கு முன் அவர்கள் இங்கு வரவில்லை என்றும் மும்பை குற்றவியல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட தீவிரவாதியிடம் காவல்துறையினர் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விலே பார்லே, கப்பல்கட்டும் சாலையில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியது எப்படி என்றும் உள்ளூரைச் சேர்ந்த யாரும் அவர்களுக்கு உதவி செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.