தாவூத்தை இ‌ந்‌தியா‌விட‌ம் ஒப்படைக்க பாகிஸ்தானு‌க்கு நெரு‌க்கடி கொடு‌க்க வே‌ண்டு‌ம்:அத்வானி!

ஞாயிறு, 30 நவம்பர் 2008 (04:41 IST)
பிரபல ‌நிழ‌ல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமை இ‌ந்‌தியா‌விட‌ம் ஒப்படைக்கக்கோரி பாகிஸ்தானுக்கு ம‌த்‌திய அரசு நெருக்குதல் அளிக்க வேண்டும் எ‌ன்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் எல்.கே.அத்வானி வலியுறுத்தியுள்ளார்.

மு‌ம்பை‌யி‌ல் நட‌ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பிருக்கலாம் என அயலுறவு‌த்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியே ஒப்புக்கொண்டுள்ளார்.

கட‌ந்த 1993ஆ‌ம் ஆண்டு மும்பை‌யி‌ல் நட‌ந்த தொட‌ர் குண்டுவெடிப்பு ‌நிக‌ழ்‌வி‌ன் முக்கியக் குற்றவாளியான தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் அரசுடன் பிரதமர் மன்மோகன் சிங் எ‌ந்தவகை பேச்சுவார்த்தையையு‌ம் தொடங்க வேண்டும் என்றும் அத்வானி கே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசிய அத்வானி இதை வலியுறுத்தியு‌ள்ளார்.

இதேகரு‌த்தை, டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாரதிய ஜனதா க‌ட்‌சி‌‌யி‌ன் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்தும் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

தீவிரவாதத்தின் கொடூரம் குறித்து பாகிஸ்தானை உணரவைப்பதற்கான ராஜதந்திர நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தாவூத்தை ஒப்படைக்க பாகிஸ்தானுக்கு மத்திய அரசு நெருக்குதல் அளிக்க வேண்டும் என்று‌ம் அவ‌ர் கேட்டுக் கொ‌ண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்