தனது முழுபலத்தோடு தீவிரவாதத்தை நசுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து காங்கிரஸ் காரியக் கமிட்டியின் அவசரக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மும்பை தாக்குதல் நிகழ்வு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
தனது முழுபலத்தோடு தீவிரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாட்டின் பாதுகாப்பு நடைமுறையை மறுசீரமைக்க வேண்டும், தீவிரவாத தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிந்து நசுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை பாகிஸ்தான் அரசு முழுமனதோடு கடைபிடிக்க வேண்டும், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு மண்ணில் இடம் அளிக்கக்கூடாது என்றும் பாகிஸ்தானுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கூட்டம் முடிந்து வெளியே வந்த காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்த்தன் திவேதியிடம், பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகுவாரா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பதிலளிக்க மறுத்து விட்டார்.