நரேந்திர மோடியின் உதவியை ஏற்க கர்கரே குடும்பத்தினர் மறுப்பு!
ஞாயிறு, 30 நவம்பர் 2008 (03:01 IST)
மராட்டிய அரசு வழியாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வழங்கும் எந்தவிதமான உதவியையும் தாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என, மும்பையில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியான பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரேயின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் கடந்த புதன்கிழமை காமா மருத்துவமனையில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் பலியான பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் கர்கரே மற்றும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலாஸ்கர் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்ற மோடி அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர், பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் பலியான 4 காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு வழங்க குஜராத் அரசு சார்பில் மாராட்டிய அரசிடம் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று மோடி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கை ஹேமந்த் கர்கரே விசாரித்து வந்த போது, அவருக்கு எதிராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடுமையாக குற்றம்சாற்றி வந்ததாகவும், ஆகையால், மோடி வழங்கும் எந்தவித உதவியையும் கர்கரே குடும்பத்தினர் ஏற்க மறுத்து முடிவு செய்துள்ளதாகவும் அவரது குடும்பத்துக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.