தலைநகர் டெல்லியில் இன்று நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி எட்டு விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக டெல்லி தேர்தல் ஆணைய அலுவலகம் தெரிவித்துள்ளது.
வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து வருவதாகவும், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏறபடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று காலை வாக்குப்பதிவு துவங்கிய சிறிது நேரத்திலேயே தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
ஒரு சில வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவை மாற்றப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியின் ஜாமீயா நகரில் அமைந்துள்ள பாட்லா ஹவுஸ் பகுதியில் பயங்கரவாதிகள் என்று சந்தேகத்திற்கு உரிய இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனினும், அப்பகுதியில் வாக்குப்பதிவு சுமுகமாக நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.