டெல்லி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் அமைதியான முறையில் துவங்கியது. நிர்மன் பவன் வாக்குச்சாவடியில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி தனது வாக்கை பதிவு செய்தார்.
அங்கு மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 69 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. மீதமுள்ள ஒரு இடமான ராஜேந்திர நகரில் டிசம்பர் 13ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இன்றைய வாக்குப்பதிவுக்காக டெல்லி முழுவதும் 10,993 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தலைநகர் முழுவதும் 52 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்றைய தேர்தலில் போட்டியிடும் 863 வேட்பாளர்களில் வெற்றியாளர்களைத் தேர்வு செய்ய 46.98 லட்சம் பெண்கள் உட்பட ஒரு கோடிய 5 லட்சத்து 82 ஆயிரத்து 369 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை இன்று பதிவு செய்ய உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக டெல்லி முதல்வராக பதவி வகித்து வரும் ஷீலா தீட்ஷித், இன்று நடைபெறும் தேர்தலிலும் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வரிசையில் நின்று வாக்களித்தார் ராகுல்: ராஜேஷ் பைலட் சாலையில் உள்ள நகர் பலிகா மேல்நிலைப் பள்ளியில் அமைப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு காலை 8.30 மணியளவில் காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல்காந்தி வந்தார். அப்போது வாக்களிக்க அங்கு 5 பேர் நின்றிருந்தனர்.
ராகுல் காந்தியைக் கண்டதும் நேரடியாக வாக்களிக்கச் செல்லுமாறு அவர்கள் அனைவரும் விலகி நின்று வழி விட்டனர். ஆனால் ராகுல் காந்தி அதனை மறுத்துவிட்டு வரிசையில் நின்றி வாக்களித்துச் சென்றார்.
வாக்குச்சாவடியிக்கு வெளியே நின்றிருந்த செய்தியாளர்களிடம், “நான் இன்று சிறிது காலதாமதமாக வாக்களிக்க வந்துவிட்டேன்” என்று மட்டும் கூறினார். செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.