டிரைடெண்ட் விடுதியில் வெடிச்சத்தம்! பதற்றம்!

வியாழன், 27 நவம்பர் 2008 (14:15 IST)
பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள டிரைடெண்ட் நட்சத்திர விடுதியில் இன்று நண்பகலில் வெடிச் சத்தம் கேட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு 40 முதல் 50 பேர் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கபட்டுள்ளனர்.

டிரைடெண்ட் நட்சத்திர விடுதியில் இன்று காலை ஒருமுறை வெடிச் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து ராணுவ வீரர்களும், காவல்துறையினரும் பிணையக் கைதிகளை மீட்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில், இன்று மதியம் சுமார் ஒரு மணியளவில் மீண்டும் ஒருமுறை வெடிச்சத்தம் கேட்டது. இதன் காரணமாக மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

டிரைடெண்ட் நட்சத்திர விடுதியின் 14, 15வது மாடிகள் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 11 அல்லது 12 பயங்கரவாதிகள் அங்கு பதுங்கியிருக்கலாம் எனக் கூறப்பட்டாலும் அவர்களின் எண்ணிக்கை குறித்த உறுதியான தகவல்கள் இல்லை.

பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் 40 முதல் 50 பிணையக் கைதிகள் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

ஆனால் அந்த வெடிச் சத்தம், ராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்டது என்றும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள மாடிக்கு செல்வதற்காக சுவர் அல்லது கதவை உடைக்க பாதுகாப்பாக நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என அத்தகவல் கூறுகிறது.

மராட்டிய காவல்துறையினர் டிரிடென்ட் நட்சத்திர விடுதியை முற்றுகையிட்டுள்ளனர். அங்கு பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை பிடிக்க தேசிய பாதுகாப்பு படைவீரர்களும், கடற்படை வீரர்களும் திட்டம் தீட்டி வருகின்றனர்.

பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 14, 15வது மாடிகளில் உள்ள ஜன்னல்களின் திரைகள் விலக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு சிலரின் நடமாட்டம் காணப்பட்டாலும் அவர்கள் பயங்கரவாதிகளா, பிணையக் கைதிகளா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்