விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்க ரூ.142 கோடி அனும‌தி!

செவ்வாய், 25 நவம்பர் 2008 (00:39 IST)
தமிழகம் உட்பட 14 மாநிலங்களில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையி‌ல் ரூ.142.24 கோடி பரிந்துரைகளுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

2008-09ஆம் ஆண்டு கிராம இளைஞர் மற்றும் விளையாட்டு இயக்கத்தின் கீழ் 14 மாநிலங்களில் 12,854 கிராம பஞ்சாயத்துக்கள் மற்றும் 376 ஒன்றிய பஞ்சாயத்துக்களில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1,216 கிராம பஞ்சாயத்துக்கள் மற்றும் 38 ஒன்றிய பஞ்சாயத்துக்களில் விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக ரூ.13,38,74,000 ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி கிராம மற்றும் ஒன்றிய பஞ்சாயத்துக்களுக்கு விளையாட்டு உள்கட்டமைப்பு வளர்ச்சி, ஒவ்வொரு ஆண்டுக்கும் விளையாட்டுப் பொருட்கள் வாங்குவது மற்றும் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது உள்ளிட்டவற்றுக்கு ஒரே முறையாக நிதியுதவி வழங்கப்படும்.

மாநிலங்களில் உள்ள ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவிலான ஆண்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.3லட்சம் மத்திய நிதியுதவியாகவும், ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ரூ.50 ஆயிரம் நிதியுதவியாகவும் வழங்கப்படும்.

மேலும், ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதல் 3 கிராம பஞ்சாயத்துக்களுக்கு பரிசு பணமாக ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.5 ஆயிரம் ஆகியவை 100 ‌விழு‌க்காடு மத்திய நிதியாக வழங்கப்படும்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் மூன்று ஒன்றிய பஞ்சாயத்துக்களுக்கு பரிசுப் பணமாக ரூ.50 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.10 ஆயிரம் 100 ‌விழு‌க்காடு மத்திய நிதியாக வழங்கப்படும். ஏற்கனவே விளையாட்டுத் துறை அமைச்சகம் 5 மாநிலங்களுக்கு ரூ.5.16 கோடி தனியாக ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்