பாகிஸ்தான் நீர் வள ஆணையத்தின் தலைவர் சையது ஜமாத் அலி ஷா தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி பக்ளிஹார் அணைக்குச் சென்று பார்வையிட்டதையடுத்து, இந்தியக் குழுவினர் வருகிற சனிக்கிழமை பாகிஸ்தான் செல்லவுள்ளனர்.
இதுகுறித்து, இஸ்லாமாபாத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் நீர் வள ஆணையத்தின் தலைவர் சையது ஜமாத் அலி ஷா, பக்ளிஹார் அணையால் சீனாப் நதியில் தங்களுக்கு வரவேண்டிய நீர் வரத்தில் நொடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இது இருநாடுகளுக்கு இடையிலான சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று கூறியுள்ள அவர், இதனால் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள விவசாய உற்பத்தி இழப்பின் மதிப்பு 40 பில்லியன் (ஒரு பில்லியன் = 100 கோடி) ரூபாய் என்றார்.
முன்னதாக, இதனை மறுத்துள்ள இந்தியா, பக்ளிஹார் அணை கட்டியதால் நீர் வரத்து குறையவில்லை என்றும், இந்த ஆண்டு பருவ மழை குறைவாக பெய்ததால்தான் சீனாப் நதியில் நீர்வரத்து குறைந்ததற்கு உண்மையான காரணமென்றும் கூறியுள்ளது.
இப்பிரச்சனை தொடர்பாக இந்தியா மீது பாகிஸ்தான் தெரிவித்த குற்றச்சாற்றையடுத்து உலக வங்கியின் நிபுணர் லாஃபிட்டி பக்ளிஹார் அணையை ஆய்வு செய்து, அணைக் கட்டுமானத்தில் எந்த அத்துமீறலும் இல்லை என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.