ஜம்மு 2ம் கட்ட தேர்தல்: மதியம்வரை 44% வாக்குப்பதிவு!

ஞாயிறு, 23 நவம்பர் 2008 (18:00 IST)
ஜம்மு- காஷ்மீரில் இன்று நடந்து வரும் 2ம் கட்டத் தேர்தலில் மதியம் 2 மணி நிலவரப்படி 44.62% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய போது குளிர் காரணமாக வாக்குச்சாவடிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. ஆனால் நேரம் செல்லச் செல்ல ஜம்முவின் பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு சூடுபிடித்தது.

தர்ஹால் தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தொண்டர்களுக்கும், சுயேச்சை வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் போக்கு காணப்பட்டதால், காவல் துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தைக் கலைத்தனர்.

இன்று தேர்தல் நடக்கும் 6 தொகுதிகளில் மதியம் 2 மணி நிலவரப்படி நவ்ஷேரா, தர்ஹால், ராஜோரி, கலாகோட் ஆகிய தொகுதிகளில் 48 விழுக்காடு வாக்குகளும், கான்தேர்பால், கங்கன் ஆகிய 2 தொகுதிகளில் 35 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியிருந்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்