ஜம்முவில் 2ம் கட்டத் தேர்தல் துவங்கியது!

ஞாயிறு, 23 நவம்பர் 2008 (10:48 IST)
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான 2ம் கட்டத் தேர்தல் இன்று காலை கடும் பனிப் பொழிவுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் துவங்கியது. அம்மாநிலத்தின் 6 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கும் என்ற போதிலும், சுமார் 7.30 மணிக்கே தேர்தல் அதிகாரிகள் வாக்குச்சாவடிகளில் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் கடுங்குளிர் காரணமாக 8 மணிக்கு மேலாகியும் குறைவான வாக்காளர்களே பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கான்தேர்பால், கங்கன் ஆகிய பகுதிகளில் குளிர் காரணமாக வாக்குப்பதிவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கான்தேர்பால், கங்கன், நவ்ஷேரா, தர்ஹால், ராஜோரி, கலாகோட் ஆகிய தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 530 வாக்குச் சாவடிகளில் இன்று 4.94 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர்.

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஓமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் அமைச்சர் முகம்மது அஃப்சல் ஆகியோர் இன்றைய தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர்.

இவர்கள் தவிர, காங்கிரஸின் குலாம் அஹமது, ரோமேஷ் சந்தர் ஷர்மா, தேசிய மாநாட்டுக் கட்சியின் ரதேய் சாம் ஷர்மா ஆகியோரும் 2ம் கட்ட தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
மேலும் 2 பெண் வேட்பாளர்களும் (பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஷெராஷ் பேகம், சுயேச்சையாக மொஹிந்தர் கவுர்) களத்தில் உள்ளனர்.

ராஜோரி தொகுதிக்கு உட்பட்ட தாரா காவல்நிலையத்திற்கு அருகே தேசிய மாநாட்டு கட்சி தொண்டர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் இடையே கைகலப்பு நடந்ததாக தொலைக்காட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ராஜோரி தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக இயங்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்