பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை: பிரதமர் உறுதி!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 விழுக்காடாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர், அதற்கு ஏதுவாக நிதி, பொருளாதாரம், அரசு முதலீடு, அந்நியச் செலவாணி மாற்று விகிதம் உட்பட அனைத்து துறைகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி கடுமையானதுதான் என்ற குறிப்பிட்ட பிரதமர், ஆனால் 1991ஆம் ஆண்டு ஆசிய நாடுகளில் இதைவிடக் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்ட போதும் இந்தியா அதனை வெற்றிகரமாக சமாளித்தது என்பதை சுட்டிக்காட்டினார்.

சர்வதேச அளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டிருந்தாலும், அதனை சமாளித்து 8 விழுக்காடு வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ளும் திறன் நம்மிடம் உள்ளது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறினார்.

நமது நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் தொடர்ந்து நெருக்கடியில் சிக்கித் தவிக்காமல், அதிலிருந்து வேகமாக மீளத் தேவையான நடவடிக்கைகளை அரசு முழு உறுதியுடன் எடுக்கும். அதற்கு தேவையான எதையும் அரசு தவிர்க்காது.

நெருக்கடியை எதிர்கொள்ள, நிதி, பொருளாதாரம், அரசு முதலீடு, அந்நியச் செலவாணி மாற்று விகிதம் ஆகிய எல்லா துறைகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நிதி நெருக்கடியை சமாளிக்க, தேவையற்ற பொருட்களின் இறக்குமதி மீது வரி அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பொருளாதார கண்காணிப்பு நடவடிக்கைகளை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஏற்கனவே எடுத்துள்ளன.

இன்றைய உலகமயமாக்கப்பட்ட சூழலில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சனை இங்கு (இந்தியாவில்) உருவாகவில்லை, மேற்கத்திய நாடுகளில்தானே ஏற்பட்டது என்று நாம் நினைக்க முடியாது. ஏனெனில் ஒவ்வொரு நாடும், மற்ற நாடுகளை சார்ந்து இருக்கின்றன என்றார் பிரதமர்.