பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைக்க வேண்டும்: இடதுசாரி!
வெள்ளி, 21 நவம்பர் 2008 (15:43 IST)
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்தக் கோரிக்கையை டிசம்பர் 10 ஆம் தேதி மக்களவையில் எழுப்பவும் அந்தக் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அவர்களுடன் தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புது டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்தைச் சந்தித்த தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என்றார்.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 50 அமெரிக்க டாலர் என்பதற்கும் குறைந்துவிட்ட நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளை மத்திய அரசு திரும்பப் பெறுவதுதான் நியாயம் என்று குறிப்பிட்டார்.
இதே கோரிக்கையை பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இடதுசாரிகளுடன் இவையும் இணைந்து மக்களவையில் பெட்ரோல், டீசல் பிரச்சனையை எழுப்பத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் கூட்டணி பற்றிக் கேட்டதற்கு, கூட்டணிகள் தேர்தல் வரும்போது உருவாகும். அதைப்பற்றி அப்போது உங்களிடம் கூறுகிறேன் என்றார் சந்திரபாபு நாயுடு.