அரசியல் மக்களைப் பிரிக்க அனுமதிக்கக் கூடாது: பிரதமர்!
வெள்ளி, 21 நவம்பர் 2008 (12:11 IST)
அரசியலில் உள்ள போட்டிகள் மக்களை சாதி, மதம், பகுதி அடிப்படையில் பிரித்துவிட அனுமதிக்கக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.
தலைநகர் டெல்லியில் இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு நடத்திய நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், சில மாநிலங்களில் நடந்துள்ள மதக் கலவரங்கள் தனக்கு மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்ததுடன், "அரசியலில் நிலவும் போட்டிகள் மக்களை சாதி, மதம், பகுதி அடிப்படையில் பிரிக்க அனுமதிக்கக் கூடாது" என்று வலியுறுத்தினார்.
ஜனநாயக அடிப்படையில் நம்மிடம் உள்ள வேற்றுமைகளை நாம் மதிக்க வேண்டும் என்றும், பன்முகத் தன்மைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவிக்காலம் முடிவிற்கு வரவிருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், 21 ஆம் நூற்றாண்டில் முழுமையான கல்வி மற்றும் அதிகாரம் பெற்ற இந்தியாவைக் காண்பதே தனது குறிக்கோள் என்று கூறினார்.