மாலேகான்: அத்வானியைச் சந்திக்கிறார் எம்.கே. நாராயணன்!
வெள்ளி, 21 நவம்பர் 2008 (10:34 IST)
பிரதமர் மன்மோகன் சிங்கின் உத்தரவுப்படி தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இன்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானியைச் சந்தித்து மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்து விளக்க உள்ளார்.
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண் துறவி சாத்வி பிரக்யா சிங் தாகூர் தன்னை மராட்டிய பயங்கரவாதத் தடுப்புப் படைக் காவலர்கள் துன்புறுத்துவதாகக் கூறியுள்ளார் என்று பா.ஜ.க. வின் பிரதமர் வேட்பாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான எல்.கே. அத்வானி குற்றம்சாற்றியுள்ளார்.
மேலும், மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் காவலர்கள் இந்து மதத் தலைவர்களைக் குறிவைத்து கைது செய்து வருவதாகவும், கைது செய்யப்பட்டுள்ளவர்களைத் துன்புறுத்தி வாக்குமூலங்களை பெறுவதாகவும் அத்வானி கூறியிருந்தார்.
இத்தகைய விமர்சனங்கள் தங்களின் விசாரணைக்குத் தடங்கலை ஏற்படுத்துவதாக மராட்டியக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று எல்.கே. அத்வானியிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையில் எந்த முறைகேடும் இல்லை என்று விளக்கினார்.
மேலும், வழக்கு விசாரணையின் முன்னேற்றங்கள் குறித்து தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தங்களைச் சந்தித்து விளக்குவார் என்றும் அத்வானியிடம் பிரதமர் உறுதியளித்தார்.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அத்வானியை எம்.கே. நாராயணன் சந்திக்கவுள்ளார். அவருடன் புலனாய்வுத் துறைத் தலைவர் (IB) பி.சி. ஹவில்தாரும் இருப்பார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரஞ்யாவின் வாக்குமூலம்!
இதுகுறித்து அத்வானியிடம் கேட்டதற்கு, சாத்வி பிரக்யாவின் வாக்குமூலத்தைப் படித்த பின்புதான் நான் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை குறித்து தெரிந்துகொண்டேன். அதில் அவர் தான் துன்புறுத்தப்படுவதாகவும், சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் என்றார்.
அந்த வாக்குமூலத்தைப் பிரதமர் மன்மோகன் சிங் தனிப்பட்ட முறையில் படித்துப் பார்க்க வேண்டும் என்று தான் கேட்டுக் கொள்வதாகவும் அத்வானி கூறினார்.