குண்டுவெடிப்பு நடந்த இடத்தை பாதுகாக்க மத்திய அரசு அறிவுறு‌த்த‌ல்!

வெள்ளி, 21 நவம்பர் 2008 (05:33 IST)
குண்டுவெடிப்புகள் நடந்த பகுதிகளில் தடவியல் ஆதாரங்களை சேகரிக்கும் வரை அந்த இடத்தில் வேறு எந்த நிகழ்வும் ஏற்படாமல் பாதுகாக்குமாறு மாநில அரசுகளு‌க்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது!

இதுகுறித்து மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய மத்திய உள்துறைச் செயலர் மதுகூர் குப்தா, குண்டுவெடிப்புகள் நடந்த சிறிது நேரத்திலேயே அந்த இடத்தைச் சுற்றி பாதுகாப்பு வளையத்தை உருவாக்க வேண்டும் என்றும், குற்றச் செயலிற்கான ஆதாரங்கள் பாதிக்கப்படாமல் இருந்தால், தடவியல் ஆதாரங்கள் அழிக்கப்படாமல் பாதுகாப்பப்படும் என்று கூறினார்.

சில மாநிலங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த இடங்களை பாதுகாக்கத் தவறியதையடுத்து, தேச பாதுகாப்பு படை நிபுணர்கள் வருவதற்கு முன்னதாகவே அந்த இடங்களில் இருந்த தடவியல் ஆதாரங்கள் அழிந்துவிட்டதாக வந்த தகவல்களை அடுத்து இந்த அறிவுறுத்தலை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அளித்துள்ளது.

மேலும், குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்குள் அனுமதியற்ற எந்த நபர்களையும் அனுமதிக்கக் கூடாது என்றும் மதுகூர் குப்தா கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்