இந்தியா-சீனா அணு ஆயுத போர் மூள்வதை மறுப்பதற்கில்லை: பரத் கர்னாட்!
புதன், 19 நவம்பர் 2008 (10:44 IST)
இயற்கை வளங்களை பகிர்வு செய்வதில் ஏற்படும் மோதல் காரணமாக இந்தியா-சீனா இடையே அணு ஆயுத போர் ஏற்படும் சாத்தியக்கூற்றை மறுப்பதற்கில்லை என்று தேச பாதுகாப்பு ஆலோசனைப் பேரவையின் முன்னாள் உறுப்பினர் பரத் கர்னாட் கூறியுள்ளார்.
‘இந்தியாவின் அணுக் கொள்கை’ என்ற தலைப்பில் பரத் கர்னாட் எழுதியுள்ள புத்தகத்தை வெளியிடும் விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய கர்னாட், அணு ஆயுத மோதல் தொடர்பான நமது பார்வையை பாகிஸ்தான் மீதிருந்து சீனத்தின் மீது திருப்பவேண்டியது நமது இராணுவ சிந்தனையாளர்களுக்கு மிக அவசியம் என்று கூறினார்.
மும்பை பங்கு சந்தையில் நடைபெறும் மொத்த வர்த்தகத்தில் 4இல் ஒரு பங்கு அளவிற்கே தனது ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை கொண்ட பாகிஸ்தான் நமக்கு அச்சுறுத்தல் ஆகாது. மாறாக, உலகளாவிய அளவில் இயற்கை வளங்களைப் பகிர்வதில் நம்மோடு மோதி வரும் சீனாவே நமக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று கர்னாட் கூறினார்.
“நமக்கு எதிராக இராணுவ, பொருளாதார பலத்தை பெருக்கிக் கொள்வதில் சீனா தீவிரமாக உள்ளது. திபெத்தில் உருவாகி சீனத்தில் யார்லுங்-டிசாங்கோ என்ற பெயரில் ஓடும் நதியே நமது நாட்டிற்குள் பிரம்மபுத்திராவாக பாய்கிறது. இந்த நதியின் நீரை திருப்பி விட சீனா முயற்சிக்கிறது. இதன் காரணமாக அஸ்ஸாம், மேற்கு வங்கம், வங்க தேசம் ஆகியவற்றிற்கு நீர் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது” என்று கூறிய கர்னாட், இதுமட்டுமின்றி, வடகிழக்கு மாநிலங்களில் இயங்கிவரும் தீவிரவாத குழுக்களுக்கு சீனாவே உதவி வருகிறது என்று கூறியுள்ளார்.
சீனத்திற்கு எதிராக இன்று உருவாகிவரும் இளம் திபெத்தியர்களின் எதிர்ப்பிற்கு அரசியல் ரீதியாக உறுதியுடன் இந்தியா ஆதரவு தெரிவித்திட வேண்டும், ஏனென்றால் இவர்கள் தங்களின் முந்தைய தலைமுறையைப் போல சாத்வீக வழியில் போராட மறுப்பவர்கள் என்று கூறியுள்ள கர்னாட், திபெத்திற்குள் சீனா ஊடுவிய பின்தான் இரு நாடுகளுக்கும் இடையே எல்லை உரசல்கள் அதிகரித்தது என்றும், எனவே, திபெத்தை நமது பாதுகாப்பிற்கான ஒரு கூடுதல் பலமாக இந்தியா கருத வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
“சீனா முதலில் அணு ஆயுத தாக்குதலை தொடுத்தால், அதற்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என்பதை நான் சந்தேகிக்கின்றேன். நம்முடைய அச்சுறுத்தலை நாம் சரியாக சீர்தூக்கிப் பார்த்து, யதார்த்தை புரிந்துகொண்டு செயலாற்றாவிட்டால், நமது அணு ஆயுதங்கள் வெறும் காட்சிப் பொருட்களாக மட்டுமே ஆகிவிடும். அணு ஆயுதத்தைப் பயன்படுத்தத் தயங்காத நாடு என்பதை நாம் வலிமையாக உணர்த்தி அதன் மூலம் அதனை பயன்படுத்துவதற்கு இணையான பயனைப் பெற முயற்சிக்க வேண்டும். இந்த தந்திரத்தைத்தான் பனிப்போர் காலத்தில் கடைபிடித்தார்கள்” என்று கூறிய கர்னாட், நீர் மூழ்கிக் கப்பல்கள் மூலமாகவும், 5,000 கி.மீ. தூரம் சென்றுத் தாக்கும் வல்லமை பெற்ற அக்னி இடைத்தூர தாக்குதல் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்குவதன் மூலமும், இரஷ்யாவின் டி-160 பிளாக்ஜாக் நீண்ட தூர குண்டு வீச்சு விமானங்களையும் கொண்டு ஒரு வலிமையான அணு பாதுகாப்புக் குடையை 2012ற்குள் உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.