ஜம்மு-காஷ்மீர் முதல்கட்டத் தேர்தல் : 55% வாக்குப்பதிவு!

செவ்வாய், 18 நவம்பர் 2008 (03:43 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்‌தி‌ற்கு முதல்கட்டமாக தே‌‌ர்த‌ல் நடந்த 10 தொகுதிகளில் 55 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது!

ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்திற்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக பண்டிப்போரா, பூன்ச், லே, கார்கல் உள்ளிட்ட 10 தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் கடும் குளிரிலும், தேர்தலை புறக்கணிக்குமாறு சில அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த நிலையிலும், சில நகரங்களில் மக்கள் பெருமளவில் வந்து வாக்களித்ததாக தேர்தல் அதிகாரி பி.ஆர். சர்மா கூறியுள்ளார்.

பண்டிப்போரா மாவட்டத்தின் குரஸ் தொகுதியில் அதிகபட்சமாக 74 வாக்குப்பதிவும், மென்தார் 65 விழுக்காடு, பூன்ச் 64 விழுக்காடு, சூரண்கோட் 58 விழுக்காடு, கார்கில் 57 விழுக்காடு, நோப்ரா 55 விழுக்காடு, லே 53 விழுக்காடு, சான்ஸ்கர் 43 விழுக்காடு, பண்டிப்போராவிலும், சோனாவாரியிலும் தலா 42 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி சர்மா கூறியுள்ளார்.

தேர்தலை நிறுத்த வலியுறுத்தி பண்டிப்போரா மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்ததில் ஒரு பெண் உட்பட 7 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்