காஷ்மீர் தேர்தல்: மிதமான வாக்குப்பதிவு!

திங்கள், 17 நவம்பர் 2008 (17:07 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக இன்று 10 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில், மாலை வரை மிதமான அளவிலான வாக்குகளே பதிவாகியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு பெரிய அளவில் வன்முறைகள் ஏதுமின்றி அமைதியாக நடைபெற்றது. பிற்பகல் 2 மணி வரை சுமார் 25 விழுக்காடு வாக்குகளே பதிவாகி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலைப்பகுதிகளான கார்கில், ஜான்ஸ்கார் தொகுதிகளில் காலையில் உறைநிலைக்குக் குறைவான வெப்பநிலை நீடித்த போதிலும், வாக்காளர்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் மிகுந்த ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

கார்கில் பகுதியில் மொத்தம் 26 விழுக்காடு அளவுக்கு அதாவது 58 ஆயிரத்து 488 பேர் வாக்களித்ததாகவும், ஜான்ஸ்கார் பகுதியில் 20 விழுக்காட்டினர் - 20 ஆயிரத்து 348 பேர் வாக்களித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் என்ற இடத்தில் அதிகபட்சமாக 35 விழுக்காடு வாக்குகள் பதிவானதாகவும் தெரிய வந்துள்ளது.

குரேஸ் பகுதியில் 25 விழுக்காடும், சோனாவாரியில் 14 விழுக்காடும் பதிவானதாக தெரிகிறது.

என்றாலும் துல்லியமாக எவ்வளவு விழுக்காடு வாக்குகள் என்பது நாளை தான் தெரிய வரும்.

இரண்டாவது கட்டமாக வரும் 23ஆம் தேதி 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்