சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

Mahendran

சனி, 4 ஜனவரி 2025 (11:11 IST)
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக, அந்த கட்டிடம் முழுவதும் தரைமட்டமானதாகவும், அதில் பணிபுரிந்த ஆறு பேர் உயிரிழந்ததாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வச்சக்காரப்பட்டி என்ற பகுதியில், பாலாஜி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் 35 அறைகளில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வந்தனர்.

இன்று காலை, பட்டாசு உற்பத்திக்கான வேதிப்பொருள் கலவை செய்யும்போது திடீரென ஏற்பட்ட உராய்வினால் வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்தில் நான்கு அறைகள் தரைமட்டமாக மாறியுள்ளதுடன், அந்த அறைகளில் இருந்த ஆறு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் கருகி பலியாகினர்.

இது குறித்து கேள்விப்பட்ட சிவகாசி மற்றும் சாத்தூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே,  விருதுநகர் மாவட்டத்தில் பல பட்டாசு ஆலைகள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு வெடிவிபத்து நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்