முன்கூட்டியே தேர்தல் வராது: மன்மோகன் சிங்!

திங்கள், 17 நவம்பர் 2008 (11:10 IST)
மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.

வாஷிங்டனில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பின் புதுடெல்லி திரும்பும் வழியில், விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது இந்தியா மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவுவதால், மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்புள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த பிரதமர், தேர்தல்கள் திட்டமிட்ட காலத்திலேயே நடைபெறும் என்று கூறினார்.

சர்வதேச பொருளாதார நெருக்கடியால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டதற்கு, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி அரசினால் ஏற்படுத்தப்படவில்லை. எனினும் அதை சமாளிக்க அனைத்துவித நடவடிக்கையையும் மத்திய அரசு எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் நெருக்கடியின் உண்மை நிலையை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை தனக்கு உள்ளதாக அவர் கூறினார்.

பொருளாதார நெருக்கடியால் உலக நாடுகள் தடுமாற்றம் அடைந்துள்ள நிலையிலும், இந்தியா 7.5 விழுக்காடு வளர்ச்சியை இன்னும் தக்கவைத்துக் கொண்டுள்ளதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

உலக நாடுகளில் எவ்விதச் சூழ்நிலை நிலவினாலும் ஸ்திரமான பொருளாதார வளர்ச்சி, அதிகப்படியான உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்வதே நமது நோக்கம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

ஜி-20 மாநாடு வெற்றிகரமாக அமைந்ததாகக் கூறிய அவர், இந்த மாநாட்டில்தான் முதல்தடவையாக வளர்ச்சியடைந்த, வளரும் நாடுகளிடையேயான விவாதம் சிறந்த முறையில் அமைந்தது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்