புரோஹித்திடம் 60 கிலோ ஆர்.டி.எக்ஸ்.: சம்ஜவ்தா குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்டது?
ஞாயிறு, 16 நவம்பர் 2008 (02:31 IST)
மராட்டிய பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கலோனல் பி.எஸ். புரோஹித் ஜம்மு- காஷ்மீரில் இருந்து 60 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிபொருளைப் பெற்றுள்ளதும், அது சம்ஜவ்தா விரைவு ரயில், மாலேகான் உள்ளிட்ட சில இடங்களில் நடந்துள்ள குண்டு வெடிப்புகளில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெப்டினன்ட் கலோனல் பி.எஸ். புரோஹித்திடம் இன்னும் தீவிர விசாரணை நடத்த வேண்டியதிருப்பதால் அவருக்குக் காவல் நீட்டிப்புத் தர வேண்டும் என்று, மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு நடந்து வரும் நாசிக் நீதிமன்றத்தில் மராட்டிய மாநில பயங்கரவாதத் தடுப்புப் படையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜய் மிஸார் கேட்டுக்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 2006 ஆம் ஆண்டு நாசிக் அருகில் உள்ள தியோலாலி என்ற இடத்தில் புரோஹித் பணியமர்த்தப்பட்டபோது, தன்னிடம் சில பைகளில் வைக்கப்பட்டிருந்த ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்தைக் காட்டியதாக, மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கின் சாட்சி ஒருவர் கூறியுள்ளார்.
சுமார் 60 கிலோ எடையுள்ள அந்த ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்தை ஜம்மு- காஷ்மீரில் இருந்து தருவித்ததாக புரோஹித் தன்னிடம் கூறியதாகவும் அந்தச் சாட்சி கூறியுள்ளார்.
2004 ஜால்னா குண்டு வெடிப்பு, 2007 சம்ஜவ்தா விரைவு ரயில் குண்டு வெடிப்பு, கடந்த செப்டம்பர் 29 இல் நடந்த மாலேகான் குண்டு வெடிப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து புரோஹித் தந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுவதால் அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டும். எனவே அவரின் காவலை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு வழக்கறிஞர் அஜய் மிஸார் கூறினார்.
இதையடுத்து புரோஹித்தின் காவலை நவம்பர் 18 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மாலேகான் வழக்கில் நவம்பர் 5 ஆம் தேதி புரோஹித் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், புரோஹித் தன்னிடம் இருந்த ஆர்.டி.எக்ஸ்.ஐ பகவான் என்பவரிடம் கொடுத்துள்ளதாகவும், அவர் அதை சம்ஜவ்தா விரைவு ரயிலில் குண்டு வைக்கப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுவதாக பயங்கரவாதத் தடுப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியா- பாகிஸ்தான் இடையில் ஓடும் சம்ஜவ்தா பயணிகள் விரைவு ரயிலில் 2007 பிப்ரவரி 17 ஆம் தேதி ஹரியானா மாநிலம் பானிபட் அருகில் நடந்த குண்டு வெடிப்பில் 68 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானாவர்கள் பாகிஸ்தான் நாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.