ஜடுகுடாவில் அணுக் கதிர்வீச்சு உள்ளது!பன்னாட்டு அமைப்பு எச்சரிக்கை!

சனி, 15 நவம்பர் 2008 (13:10 IST)
ஜார்க்கண்ட் மாநிலம் ஜடுகுடாவில் உள்ள யுரேனிய சுரங்கத்தில் இருந்து அணுக் கதிர் வீச்சு வெளியேறிவருவதாக அங்கு சோதனை நடத்திய பன்னாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது.

நமது நாட்டின் அணு மின் உலைகளுக்குத் தேவையான யுரேனியம் தாதுப் பொருள் வளம் உள்ள இடங்களில் ஜடுகுடாவும் ஒன்று. மண்ணோடு கலந்துள்ள யுரேனியத் தாதுவை தோண்டி எடுக்க ஒரு சுரங்கம் அமைத்துள்ளது இந்திய யுரேனியக் கழகம் (Uranium Corporation of India limited - UCIL).

இந்த இடத்திற்கு வந்து சோதனை நடத்திய அணு ஆயுத தடுப்பிற்கான பன்னாட்டு மருத்துவர்கள் (International Physician for Prevention of Nuclear Weapon - IPPNW) என்றழைக்கப்படும் தன்னார்வ அமைப்பு, ஜடுகுடா சுரங்கத்தில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மண்ணில் இருந்து யுரேனியம் பிரித்தெடுக்கப்பட்ட மண்ணும், மற்ற கனிமங்களும் அங்குப் பரவிக் கிடப்பதாகவும், அதில் கலந்துள்ள யுரேனிய துகள்களில் இருந்து கதிர் வீச்சு பரவி வருகிறது என்றும் கூறியுள்ளது.

யுரேனியச் சுரங்கத்திற்கு அருகிலேயே மக்கள் வசித்துவருவதால் கதிர் வீச்சு அவர்களைப் பாதிக்கும் சாத்தியமுள்ளதென அந்த அமைப்பின் துணைத் தலைவரான பேராசிரியர் டில்மான் ஆல்ஃபிரட் கூறியுள்ளார். இந்த அமைப்பு தனது பணிகளுக்காக நோபல் அமைதிப் பரிசு பெற்றுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் ஐ கேன் என்ற ஒரு பிரச்சாரத் திட்டத்திற்காக இந்தியா வந்துள்ள டில்மான், ஜடுகுடா யுரேனியச் சுரங்கத்தில் பணியாற்றிவரும் 3,000 பணியாளர்களுக்கு கதிர் வீச்சின் அளவை அறியும் கருவிகள் அளிக்கப்படவில்லை என்றும், யுரேனியக் கதிர் வீச்சு அங்குள்ள மணற் பகுதி முழுவதும் பரவியுள்ளது என்றும் எச்சரித்துள்ளார் என்று யு.என்.ஐ. செய்தி கூறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்