அணு உலை பாதுகாப்பு: மும்பையில் பன்னாட்டு அணு விஞ்ஞானிகள் மாநாடு!

சனி, 15 நவம்பர் 2008 (10:19 IST)
அணு உலைகளை பாதுகாப்பாக நிறுவுவது, முழு பாதுகாப்புடன் அதனை இயக்குவது தொடர்பான ஒருமித்த பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்க பன்னாட்டு அணு உலை பாதுகாப்பு மாநாடு மும்பையில் நடைபெறுவுள்ளது.

அணு உலைகளை கண்காணிக்கும் பன்னாட்டு அணு சக்தி முகமை (ஐ.ஏ.இ.ஏ.) இம்மாநாட்டை நடத்துகிறது. இந்தியாவின் அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையமும் (AERB), இந்திய அணு சக்தி கழகமும் (NPCIL) இணைந்து மாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றன.

உலக நாடுகளில் இருந்து 300க்கும் அதிகமான அணு சக்தி நிபுணர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். அவர்களில் பன்னாட்டு அணு சக்தி முகமையின் துணை இயக்குனர் டி. தனிகுச்சி, பிரான்ஸ் நாட்டின் அணு பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் ஏ.சி. லாகோஸ்டோ ஆகியோர் முக்கியமானவர்கள்.

இந்திய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர், அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. சர்மா, இந்திய அணு சக்தி கழகத்தின் தலைவர் எஸ்.கே.ஜெயின், பாபா அணு சக்தி மையத்தின் இயக்குனர் எஸ்.பானர்ஜி ஆகியோர் முக்கியமானவர்கள்.

அணு உலைகளை நிறுவுதலிலும், அதனை முழுப் பாதுகாப்புடன் இயக்குவதிலும் எவ்வித ஆபத்தும் இல்லாத நிலையை உறுதிப்படுத்தும் ஏற்பாடுகள் தொடர்பான விவரங்கள் இம்மாநாட்டில் பகிர்ந்துகொள்ளப்படும் என்று இந்திய அணு சக்தி ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

வரும் 17ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கும் இம்மாநாடு 5 நாட்களுக்கு நடைபெறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்