சத்தீஷ்கர் தேர்தலில் நக்சலைட் தாக்குதல்: காவலர் பலி!
சனி, 15 நவம்பர் 2008 (01:40 IST)
சத்தீஷ்கரில் முதல் கட்டமாக 39 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த வாக்குப் பதிவின்போது, பஸ்தார் வட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படைக் காவலர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதனால் 21 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. வாக்குச் சாவடிகளைச் சூறையாடிய நக்சலைட்டுகள் அங்கிருந்த வாக்குப் பதிவு இயந்திரங்களையும் தூக்கிச்சென்றனர்.
சத்தீஷ்கரில் 39 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வெள்ளியன்று வாக்குப் பதிவு நடந்தது. இதில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமுள்ள 12 தொகுதிகளில் காலை 7 மணிக்கே வாக்குப் பதிவு துவக்கப்பட்டது.
இந்நிலையில், அன்டகார்க் தொகுதியில் உள்ள கோடேனார் என்ற வாக்குச் சாவடியில் புகுந்த நக்சலைட்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மத்திய ரிசர்வ் படைக் காவலர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 3 காவலர்கள் படுகாயமடைந்தனர் என்று ஏ.டி.ஜி.பி. கிரிதரி நாயக் தெரிவித்தார்.
இதற்கிடையில், "பஸ்தார் வட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலாலும், வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருடிச் செல்லப்பட்டதாலும், கோடானார் உள்ளிட்ட 21 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் மறு வாக்குப் பதிவு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று சத்தீஷ்கர் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அலோக் சுக்லா தெரிவித்தார்.