தகவல் ஒளிபரப்பு அமைச்சக பொறுப்பை பிரதமர் ஏற்றார்!

புதன், 12 நவம்பர் 2008 (09:53 IST)
மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதையடுத்து அவருடைய அமைச்சகப் பொறுப்பை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இத்தகவலை குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி முழு உடல் பெற்று செயல்படும் நிலைக்குத் திரும்பும் வரை அவர் வகித்த அமைச்சகப் பொறுப்பை பிரதமர் ஏற்பார் என்றும், பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி தொடர்ந்து முக்கிய அமைச்சராக நீடிப்பார் என்றும் குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

கடந்த மாதம் 13ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள அகில இந்திய விஞ்ஞானக் கழக மருத்துவமனையில் தாஸ்முன்ஷி சேர்க்கப்பட்டார். பிறகு இந்திரப்பிரஸ்தாவிலுள்ள அப்பலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு சுவாச கருவி பொறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றாலும் அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.

ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 6ஆம் தேதி மால்டாவில் இருந்து கொல்கட்டா திரும்பும் வழியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்குப் பிறகு அவர் உடல் நலம் பெற்றார். அதன் பிறகு மீண்டும் கடந்த மாதம் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்