ஓ.என்.ஜி.சி.- இந்திய யுரேனிய கழகம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது!
புதன், 12 நவம்பர் 2008 (05:15 IST)
யுரேனியம் கண்டறிதல், மேம்படுத்துதல் பணிகளில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓ.என்.ஜி.சி.), இந்திய யுரேனிய கழகம் (யு.சி.ஐ.எல்.) ஆகியவற்றிற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அணு சக்தி ஆணையத் தலைவர் டாக்டர் அனில் ககோட்கர் முன்னிலையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத் தலைவர் ஆர்.எஸ். சர்மா, யு.சி.ஐ.எல். நிறுவனத் தலைவர் ராமேந்திர குப்தா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ஓ.என்.ஜி.சி. நிறுவன இயக்குநர்கள் டாக்டர் ஏ.கே.பால்யன், என்.கே. மித்ரா, டி.கே. பாண்டே, யு.என். போஸ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பெட்ரோலியப் பொருட்கள் கண்டுபிடிப்பில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு மிகுந்த அனுபவம் உள்ளது; யுரேனியம் கண்டறிதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகளில் அணு சக்தி ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் யு.சி.ஐ.எல். நிறுவனம் முன்னோடியாகத் திகழ்கிறது. எனவே இந்த இரண்டு பொதுத் துறை நிறுவனங்களும் அகழ்வாய்வுப் பணிகளில் இணைந்து பணியாற்றுவது பொருத்தமாக இருக்கும் என்று இரு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்தனர்.